
டிசம்பர் 22/2025 ; திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே பத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மேலும் இப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது கணவர் விஸ்வநாதனும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில்
சுசின் பாலாஜி என்கிற தத்தெடுத்த மகன் உள்ளார்.
தலைமை ஆசிரியர் சுசீலாவின் கணவர் இறந்த நிலையில், சுசீலா, அவரது தத்து மகன் சுசின்பாலாஜி மற்றும் சுசீலாவின் சகோதரி வனரோஜா ஆகியோர் மாடி வீட்டில் வசித்து
வந்த நிலையில் வழக்கம் போல நேற்று முன் தினம் இரவு உணவு அருந்தி விட்டு அனைவரும் வீட்டிற்குள் உறங்கி உள்ளனர்.
அப்போது அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் கதவை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் அலறி அடித்து கொண்டு சுசீலா மற்றும் அவரது சகோதரி வணரோஜா ஆகியோர் எழுந்து சென்று பார்த்தபோது கருப்பு துணியை முகத்தில் கட்டிக்கொண்டு மர்ம நபர்கள், மூன்று பேர் வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை திருட முயன்ற போது இரு பெண்களும் அவர்களை தடுத்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனால் பயந்த அந்த மர்ம நபர்கள், வீட்டில் உள்ள தலையணையை எடுத்து இருவரின் முகத்திலும் அமுக்கி உள்ளனர். சத்தம் கேட்டவுடன் வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்த சுசின்பாலாஜியும் எழுந்து ஓடி வந்து தடுத்துள்ளார்.

இதனையடுத்து
திருடர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுசின்பாலாஜியை வெட்ட முயன்றுள்ளனர். ஆனால் சுசின்பாலாஜி அதில் இருந்து தற்காத்து கொள்ள அருகில் இருந்த நாற்காலியை எடுத்து திருடர்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக சத்தம் கேட்டதால் உறங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டதால் உடனடியாக வீட்டின் உள்ளே புகுந்த மூன்று பேரும், வீட்டு வாசலில் காவலுக்கு நின்ற மூவரும் இரண்டு இருசக்கர வாகனத்தை வெளியிலேயே விட்டு விட்டு தப்பித்து ஓடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட கொரடாச்சேரி காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி மோப்பநாய் உதவியுடன் இந்த ஆறு கொள்ளையர்கள் யார் என்று தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
இதில் தஞ்சாவூர் திட்டை பகுதியைச் சேர்ந்த சுசீலா, பூர்வீக சொத்து பிரச்சனை காரணமாக தனது சகோதரி சுசீலாவுடன் கொரடாச்சேரி பத்தூரில் வசித்து வந்த நிலையில் அவரது தம்பி மகன் அஜய்பிரவீன் என்பவர் தனக்கு சொத்து கிடைப்பதற்கு இடையூராக இருக்கும் சுசின் பாலாஜியை மிரட்டுவதற்காக தனது நண்பர்களான தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிஹரன், விஜய், பழனியப்பன், குமார் ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரவில் கருப்பு துணியை முகத்தில் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் சுசின் பாலாஜியை தாக்க முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கூட்டம் கூடியதால் அங்கிருந்து அவர்கள் தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அஜய், பிரவின், பரத்குமார், ஹரிஹரன், விஜய், பழனியப்பன் ஆகியோர் அபிவிருத்திஸ்வரம் பாலத்தின் அடியில் மறைந்திருந்த போது கைது செய்துள்ளனர். இதில் குமார் என்பவர் மட்டும் தப்பியோடி உள்ளார். குறிப்பாக அஜய், பிரவீன், பரத்குமார் உள்ளிட்டவர்களின் நண்பர்கள் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிகழ்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் பாராட்டு தெரிவித்தார்.






