நெல்லை மாவட்டம் பணகுடியில் சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – 20 பேர் கைது, 400 மாடுகள் சிறைப்பிடிப்பு! தங்கியிருக்கும் இடத்திலேயே சீமான் சிறை வைப்பு …
நெல்லை: நவம்பர் 22 – 2025. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (2006) மீட்டெடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த “மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்” மற்றும் “வன உரிமை கிராம சபை பதாகை திறப்பு” நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினரிலிருந்து 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மாடுகளின் உரிமையாளர்கள் மூவரும் அடங்குவர். போராட்டத்திற்காக தயாராகக் கொண்டுவரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாடுகள் காவல்துறையால் சிறைப்பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் தலைவர் இராஜீவ்காந்தி, செயலாளர் கென்னடி உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் பணகுடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலயமாக அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இந்நிகழ்வுக்குத் திருநெல்வேலியில் இருந்தார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்திலேயே அவரை போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். காவல்துறை வட்டார தகவலின்படி, “சீமான் கைது செய்யப்படவில்லை. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட பணகுடி போராட்டத்திற்குச் செல்ல முயன்றால் அவர் கைது செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்த சீமான், “வன உரிமை மற்றும் மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதார உரிமைக்கான சட்டப்படி நிகழ்வுகளைத் தடுக்குவது ஜனநாயக விரோதம்” எனக் குற்றம் சாட்டினார். தமிழக அரசு மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரம், சூழல் பங்களிப்பு மற்றும் பண்பாட்டு மெருகை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.






