
டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்…
திருவாரூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை திருவாரூர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நன்னிலம் முத்துப்பேட்டை, குடவாசல் வலங்கைமான், கோட்டூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் குட்கா பான் மசாலா ஆகியவற்றை கடத்துதல் விற்பனை செய்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 116 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 248 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரவுடியிசம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஈடுபட்ட ரவுடிகள் இதுவரை 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளி மாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்துதல் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,747 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர் உரிமம், இருசக்கர வாகனபதிவு புத்தகம், காப்பீடு, தலைக்கவசம் உள்ளிட்டவை இல்லாமல் வாகனம் இயக்கியதாக இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்ந்து இதே குற்ற செயல்களில் ஈடுபட்ட 1,937 வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தெரிவித்துள்ளார்.






