நெல்லை ; டிசம்பர் 10 : .

நடிகர் தனுஷ் நடிப்பில் “போர்தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெரும் பொருட் செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லையின் புகழ்பெற்ற ஆலயமான நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்தனர்.
அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டு பூஜையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ் நெல்லை மாவட்டத்திற்கு படப்பிடிப்புக்காக வரும்போது எல்லாம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் கோவில் வந்து நேரில் தரிசனம் செய்வது வழக்கம். அண்ணன் செல்வராகவன் போலவே தம்பி தனுசும் சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






