
திருவண்ணாமலை, டிசம்பர் 05,2025 ; கார்த்திகை மகாதீபத் திருவிழா நிறைவடைந்த இரண்டாம் நாளை ஒட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆதி அருளாளனாகிய உண்ணாமுலையம்மனுடன் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக தெய்வீக ஊர்வலமாக எழுந்தருளினார். ஆண்டில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இந்த அரிய கிரிவல நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்குத் திரண்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 3 ம் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதே நாளில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு உலகமறிந்த நிகழ்வாக கோடி கணக்கான பக்தர்களை கவர்ந்தது. மகாதீபம் நிறைவடைந்த இரண்டு நாட்கள் கழித்து, மரபுப்படி அண்ணாமலையார் கிரிவலம் வரும் வருடாந்திர தெய்வீக நிகழ்வு நடைபெற்றது.
கிரிவல நாள் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதும், அண்ணாமலையார் – உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னர் இருபேரும் ராஜகோபுரம் முன் அமைந்த 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி, பரிவாரங்களுடன் கிரிவலப் பயணத்தைத் தொடங்கினர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையின் ஆன்மீக பெருமையை உணர்த்தும் வகையில், பக்தர்கள் கிரிவலப் பாதை முழுவதும் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். மாலைகள், புதிய ஆடைகள், தேங்காய் உடைப்பு போன்ற வழிபாட்டு முறைகள் வழிநெடுகிலும் நடைபெற்றன. “நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்” என்று போற்றப்படும் அண்ணாமலையாரை நேரடியாக கிரிவலத்தில் தரிசிப்பது பக்தர்களுக்கு அபூர்வமான பாக்கியமாக கருதப்படுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இறைவனின் கிரிவல நிகழ்வுகளில், கார்த்திகை தீபத்திற்குப் பிறகான இந்த ஊர்வலம் முதன்மையானது. இன்னொன்று பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் நிகழ்ச்சிக்குப் பிந்தைய நாளில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் கார்த்திகை மகா தீபம் மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கிரிவல ஊர்வலம், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று ஒழுங்காக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையின் ஆன்மீக ஒளி மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதும் பக்தர்களைத் தழுவியது.






