தொடர் கனமழை எதிரொலி ! சதம் அடித்தது மணிமுத்தாறு அணை நீர்மட்டம். அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

வானிலை ஆராய்ச்சி மையம் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது குறிப்பாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 66 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால்

நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 99.65 அடி என இருந்த நிலையில் 100 அடியை தாண்டி இன்று காலை நிலவரப்படி 103.5 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதே நேரம் மணிமுத்தாறு அணைக்கு கீழ் பகுதியில் இருக்கும் அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியின் அடையாளமே தெரியாத அளவு வெள்ள நீர் கொட்டுகிறது. அருவியை தாண்டி வெள்ளப்பெருக்காக தண்ணீர் கரைப்பகுதியிலும் கரைபுரண்டு செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பரப்பளவில் பெரிய அணையான 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 100 அடியை தாண்டி நிரம்புவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






