நெல்லை; நவம்பர் 23-2025 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (23.11.2025) மற்றும் நாளை (24.11.2025) மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட வாய்புள்ள பேரிடருக்கு உதவிடும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை வருகை புரிந்துள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் 28 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஒருங்கினைந்து செயல்பட உள்ளனர். மிக கன மழையை எதிர்நோக்கி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிரம்பிய நிலையில் உள்ள நீர்நிலைகளின் அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும், ஆற்றில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதன் அருகே சென்று செல்பி எடுக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மின்சாரம் தடைபட வாய்புள்ளதால் மெழுகுவர்த்தி, டார்ச்லைட், ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்கவும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

மழை பெய்யும் நேரங்களில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும். துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் தொலைபேசி எண். 0462-2501070 ஆகியவற்றை தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும், வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் பொதுமக்கள் தங்களது கைபேசியில் தமிழக அரசின் TNAlert செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி செயலியினால், வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பினை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார்.






