கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன்
நெல்லை: நவ. 20 – 2025
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

“பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 2 நாட்களில் மட்டும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆட்சியை விட குற்றச்செயல்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் 17 சதவீதம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளன,” என்றார்.மேலும் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் கவலைக்கிடையாக உள்ளது. பாதாள சாக்கடை பணிக்கான உபகரணங்கள் இல்லாமல் சாலைகள் சேதமாகியுள்ளன. சொத்துவரி, மின்கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டிட அனுமதிக்காக ஒரு சதுர அடிக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் மக்கள் கவனித்து வருகின்றனர்.”பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் ரூ.18,000 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அதைப் புறக்கணித்து சிலர் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.மெட்ரோ ரெயில் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. மாறாக திட்டம் திருத்தப்பட வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு இடையேயான தூரம் குறைவாக இருப்பதால் சில தொழில்நுட்ப திருத்தங்கள் தேவைப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக உறுதியாகச் செயல்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும்,” என்றார்.






