நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

நெல்லை மாநகர பகுதியான கே டி சி நகரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மாற்று சாதி பெண்ணை காதல் செய்ததற்காக மென்பொருள் பொறியாளர் கவின் என்ற இளைஞர், காதலித்த பெண்ணின் சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் சகோதரர் ஜெயபால் என மூவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த ஆணவ கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி, இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை உதவி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சுர்சித்தின் சகோதரர் ஜெயபால் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் இதுவரை இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான சுர்ஜித்தின் தாயார் உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி ஏன் கைது செய்யப்படவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளது. அதனடிப்படையில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஆணவ படுகொலை தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி பிடிவாரண்ட் கொடுத்துள்ள உத்தரவு வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி மற்றும் காவல் துறை வட்டாரத்தில் மீண்டும் முக்கிய பேசுபொருளாகி உள்ளது.






