“பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை

நாங்குநேரி, நவம்பர் 12, 2025 – “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அது கணிப்பல்ல, திணிப்பு! பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் SIR WAR Room திறப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் SIR பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள WAR Room-ஐ காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்.

WAR Room நோக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாட்டில் SIR க்காக WAR Room திறக்கப்பட்டுள்ளது.

“வாக்கு சீர்திருத்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இதில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து மக்களுக்கு உதவுவதற்காகவும், வாக்குகளை யாரும் திருடி விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பிரத்யேக WAR Room திறக்கப்பட்டுள்ளது” என்று செல்வப்பெருந்தகை விளக்கினார்.

தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக வாக்கு திருட்டு குற்றச்சாட்டு

தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது:

நாடு முழுவதும் வாக்கு திருட்டு

“நாடு முழுவதும் வாக்குகளை எப்படி திருடுகிறார்கள், தகுதியான வாக்குகளை நீக்குவதும், தகுதியற்றவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதும், இறந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதும், உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்குகளை எடுப்பதுமாக தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து செய்து வருகிறது என்பதைதான் ராகுல்காந்தி ஒவ்வொரு செய்தியாளர் மன்றத்திலும் தெரிவித்து வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

பருவமழை மற்றும் தேர்தல் காலத்தில் SIR

“பருவமழை தொடங்கி விட்டது. மறுபுறம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் தீவிர வாக்கு சீர்திருத்தத்தை மேற்கொள்வோம் என்பது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை. மக்களை அல்லல்படுத்தவே பாஜக இவ்வாறு செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் காலம் vs தற்போது

“காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சீர்திருத்தம் வேறு! அப்போது மக்கள் பயப்படவில்லை. இப்போது பருவமழை, தேர்தல் என்ற நிலையில் ஆசிரியர்களையும் அங்கன்வாடி ஊழியர்களையும் அரசு ஊழியர்களும் இரண்டு, மூன்று மணிக்கு மேல் SIR பணிக்கு செல்கிறார்கள்” என்றார்.

SIR படிவம் சிக்கல்கள்

“குறுகிய காலத்திற்குள் SIR விண்ணப்பத்தை நிரப்ப முடியாது. இரண்டு பக்கம் இருக்கிறது, என்னாலையே உடனடியாக அதை செய்ய முடியாது. இப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஏன் மக்களை தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஆளாக்குகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற வழக்கு

“காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சல்மான் குர்சித் ஆஜராகிறார். இப்போது தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் மக்களின் வாக்குகளை திருடக்கூடாது! விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த WAR Room-ஐ திறக்க சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஏற்பாடு செய்திருக்கிறார்” என்றார்.

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு விமர்சனம்

கருத்து திணிப்பு என்று குற்றச்சாட்டு

“பீகாரை பொருத்தவரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பு! இன்னும் இரண்டு நாட்களில் முடிவு வரும். அப்போது சந்திக்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்தியா கூட்டணி வெற்றி நம்பிக்கை

“பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று உறுதியாக தெரிவித்தார்.

SIR முடிப்பதில் சாத்தியமில்லை

“குறுகிய காலமே உள்ளது, அதற்குள் SIR-ஐ முடிக்க முடியாது. அதற்கு சாத்திய கூறுகள் இல்லை. தவறு செய்வதற்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் தள்ளிப்போகுமா?

தேர்தல் தள்ளி போகுமா என்ற கேள்விக்கு, “பாஜக ஆட்சியில் எது வேண்டுமானாலும் எந்த அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம், அது பாஜக நினைப்பதுதான்” என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நியமனம்

“மாவட்ட தலைவர்களை நியமிப்பதற்காக புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள். அவர்கள் வந்ததும் புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பார்கள். சில இடங்களில் பழைய மாவட்ட தலைவர்களே தொடரவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

கே.என்.நேரு தம்பி கொலை வழக்கு குறிப்பு

“திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த தம்பியான ராமஜெயம் கொலை வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் காவல்துறை திணறுகிறதோ! அதுபோல தான் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வழக்கிலும் காவல்துறை ஒரு முடிவுக்கு வர முடியாமல் நிற்கிறது. வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

தமிழகம் முழுவதும் WAR Room திட்டம்

“தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் WAR Room திறக்கப்பட்டு அதில் மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்களை நியமித்து காங்கிரஸ் பேரியக்க வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் சேகரித்து பாதுகாக்கும் வகையில் செயல்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »