
சென்னை – பிப்ரவரி 10, 2026 ; நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது. இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி, தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால், படத்தை மறு ஆய்வு குழுவின் (Review Committee) பரிசீலனைக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவிட்டது.
நீதிமன்றப் படி ஏறினர்
இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க ஜனவரி 9ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்பியது.
திடீர் வாபஸ்
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (பிப்.,9) மீண்டும் தனி நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவையே (Review Committee) நேரடியாக அணுக முடிவு செய்துள்ளோம். எனவே, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுகிறோம்,” எனத் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இதுதொடர்பாகப் பதிவுத்துறையில் கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கின் பின்னணி என்ன?
- சிக்கல்: மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் காட்சிகள் இருப்பதாகப் புகார்.
- திருப்பம்: தனி நீதிபதி அனுமதி அளித்த நிலையில், மேல்முறையீட்டில் அது ரத்து செய்யப்பட்டது.
- முடிவு: சட்டப் போராட்டத்தைக் கைவிட்ட தயாரிப்பு நிறுவனம், தற்போது சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை நம்பி இறங்கியுள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், இனி ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு குறித்த முடிவு, சென்சார் போர்டு ரித்வியூ கமிட்டியின் கையில் உள்ளது.






