
மும்பை: பிப்ரவரி 10, 2026 ; இந்தியாவில் எலக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஓமேகா சீகி மோபிலிட்டி நிறுவனம் அதிக வேகத்தில் பயணம் செய்யும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வெக்ஸ்டிரா (Vextra) என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.99,900 (ரூ.1 லட்சத்திற்கு குறைவான விலை) மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வெக்ஸ்டிரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிட்டி பயணத்திற்கும் தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை கமர்ஷியல் எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்திய நிறுவனம், தற்போது பயணிகள் பயன்பாட்டிற்கான வாகனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. முழு சார்ஜில் 110 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3.45kWh, IP67 தரச்சான்று பெற்ற LFP பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் 3kW BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
ரைடர்களுக்காக 3 விதமான ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளன:
எக்கோ
சிட்டி
ஸ்போர்ட்
ஸ்கூட்டரில் 3.5 இன்ச் கலர் LCD டிஸ்ப்ளே உள்ளது. இதில் பேட்டரி சார்ஜ் நிலை, மீதமுள்ள பயண தூரம் உள்ளிட்ட தகவல்கள் காண்பிக்கப்படும். மேலும் சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், GSM கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பேட்டரியை 0–80% வரை சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகும். முழு சார்ஜ் பெற 5 மணி நேரம் தேவைப்படும். குறைந்த செலவில் இயக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், குறைந்த விலையிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமேகா சீகி மோபிலிட்டி நிறுவனம் ஃபரிதாபாத்தில் உள்ள தனது ஆலையில் இந்த வாகனத்தை தயாரிக்கிறது. ஆண்டிற்கு சுமார் 25,000 வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் நல்ல விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






